தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் விளக்கமளித்தார்.
மேலும் இந்த ஆய்வில் 4 மாவட்ட ஆட்சியர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர். இதில் மழை பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் விளக்கமளித்தனர். பின்னர் அவர்களிடம், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படும் என்றும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.