இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் என இவர்களின் காம்போ வில் வெளியான படங்கள் காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் பொக்கிஷங்கள்.

சில படங்களை மட்டுமே செல்வராகவன் இயக்கி இருந்தாலும் அவரின் கலை நேர்த்தி ரசிகர்களை ஆட்கொண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். படிபடியாக தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பணுமுகத் திறன் கொண்டவர். உலக அளவில் இவரின் படங்களுக்கு ஒரு தனி ரசிகர் வட்டம் உண்டு.

தற்போது, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் தமது இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷ் 50 படத்தை இயக்கி வருகிறார். அதே போல அடுத்து கிட்டதட்ட 5 படங்களில் கமிட் ஆகி நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் செல்வராகவன் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், இரண்டாம் உலகம் எடுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் மல்டி ஸ்டார் கதை ஒன்றை தயார் செய்து வைத்திருந்தார் இயக்குனர் செல்வராகவன். அதில் அஜீத், பரத், தனுஷ் இவர்களை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டாம் உலகம் தோல்வி அடைந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது செல்வாவிடம், நடிகர் தனுஷ் நான் தயாரிக்கிறேன் நீ மீண்டும் அந்த கதையை எழுத்து நாம் உருவாக்கலாம். நடிகர் அஜித்துக்கு பதிலாக நாம் வேறு ஒருவரை வைத்து எடுத்துக் கொள்ளலாம் என கூறி உள்ளாராம். அதில் தனுஷ், பரத் நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும், வளர்ந்து வரும் சில நல்ல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.