Mnadu News

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு சமூகநீதிக்கு பேராபத்து: முதல் அமைச்சர் பேச்சு.

கடந்த 1920- ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தை இரட்டை ஆட்சி முறைப்படி ஆட்சி செலுத்திய நீதிக்கட்சியானது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தது. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன்பிறகுதான், பள்ளிக் கல்லூரிக்குள் பெருமளவில் நுழைந்தார்கள். அப்படி கிடைத்த கல்வியின் மூலமாக வேலைவாய்ப்பை அடைந்தார்கள். இதற்கு வேட்டுவைக்கும் விதமாக, கம்யூன் அரசாணை என்பது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1950-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவில், சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்றுதான் வரையறையில் உள்ளது. அதேதான், அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரவேண்டும் என்பதுதான், இந்திய அரசியலமைப்பு சட்ட வரையறை.
அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், பொருளாதாரத்தை அளவுகோலாக புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. அதன்படி ஒரு சட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு செய்தார்கள். அந்த சட்டத்தைத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளனர். சமூகத்தில் முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பாஜக அரசின் திட்டம்.
இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கிறார்கள். இதனை விளக்கமாக நான் சொல்ல தேவையில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது”. “நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தும்படி உள்ளதாக அவர் பேசி உள்ளார்.

Share this post with your friends