Mnadu News

2019-2020 கலைமாமணி விருதுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் அரசு தகவல்.

நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை.
சென்னையில் கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.2.2021-இல் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத நபர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘கலைகள் பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது, 2 படங்களில் நடித்துவிட்டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது’ என நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயணபிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2019 – 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this post with your friends