கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு தி.மு.க. தொண்டர்கள் சாலையில் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு சென்றார். விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 35 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைதொடர்ந்து 4 மாவட்டங்களிலும் 273 முடிவுற்ற திட்டப்பணிகளையும் பொள்ளாச்சியில் இருந்தபடியே காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும் விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக ரூ.1,274 கோடி மதிப்பில் புதிய திட்ட பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உள்ளார்.
முதலமைச்சர் வருகையையொட்டி பொள்ளாச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.