அண்டார்டிகாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக பனிப்பாறைகள் உருகி வருவதாக தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் தரவு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் அண்டார்டிகாவில் கடல் பரப்பில் உருகும் பனிக் கட்டிகள் பின்பு குளிர்காலத்தில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மீண்டும் பனிக் கட்டிகளாக உருமாறும். வருடந்தோறும் இதேபோன்ற சீதோஷ்ண நிலை அண்டார்டிகாவில் நிலவி வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவில் நடப்பாண்டில் பனி உருகி மீண்டும் பனிக் கட்டிகளாக மாறுவதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவில் அண்டார்டிகாவில் பனிக் கட்டிகள் அதிகளவில் உருகி உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். ஏறத்தாழ 16 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பனிக் கட்டிகள் குறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். கடந்த 2022ஆம அண்டு இதே காலக்கட்டத்தை காட்டிலும் அபாய அளவில் பனிக் கட்டிகள் உருகுவது அதிகரித்து உள்ளதாக தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் தரவு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை மாதத்தின் நடுபகுதியில் ஒட்டுமொத்தமாக 26 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவில் பனிக்கட்டிகள் இருப்பு உள்ளதாகவும், அது கடந்த 1981 – 2010 ஆண்டுகளில் கணிக்கப்பட்ட சராசரி அளவை காட்டிலும் குறைவு என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த பனி உருகி இருப்பதை நிலப்பரப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவை விட அளவில் பெரியது என்றும், டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ மெக்சிகோ. அரிசோனா, நெவாடா, உடா மற்றும் கொலரடோ ஆகிய அமெரிக்க மாகாணங்களின் ஒருங்கிணைந்த பகுதியை காட்டிலும் பெரியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானது என்றும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக் கூடிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இது தொடர்பாக கூறிய விஞ்ஞானிகள் “அண்டார்டிக் ஒரு தொலைதூர மற்றும் சிக்கல்கள் நிறைந்த கண்டமாக காணப்படுகிறது.
ஆர்டிக் பகுதியை போன்று இல்லாமல், காலநிலை மற்றும் பருவ மாற்றத்தின் நெருக்கடியின் வேகத்தால் கடல் பனி தொடர்ந்து உருகி வருகிறது. அண்டார்டிக்கில் கடந்த பல ஆண்டுகளாக பனிக் கட்டிகள் உருகும் நிலை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டு காணப்படுகிறது” எனத் தெரிவித்து உள்ளனர்.