உலக நாயகன் கமல்ஹாசன் 1960 ஆம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தில் அறிமுகம் ஆகும்போது அவருக்கு வெறும் 6 வயது தான். அன்று துவங்கிய கலைப் பயணம் இன்னும் அதே வேகத்தோடு இயங்கி வருகிறார் நம்மவர்.
ஆம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, எடிட்டிங், பாடல் எழுதுவது, பாடுவது, நடனம் அமைப்பது, தொகுத்து வழங்குவது என பல முகங்கள் இவருக்கு உண்டு. அனைத்திலுமே அவர் திறம்பட செய்வது தான் ஆச்சரியத்தின் உச்சமே. கலை துறைக்கு கமல் வந்து 64 வருடங்கள் இன்றோடு நிறைவடைந்து உள்ளது.
தெலுங்கு மொழியில் அவர் நடித்த “மரோ சரித்ரா”, “சுவாதி முத்யம்”, இந்தியில் நடித்த “ஏக் துஜே கேலியே”, “சத்மா”, “சாகர்” போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றி அவரை இன்னும் பலதரப்பட்ட மொழி விரும்பிகளிடமும் கொண்டு சேர்த்தது.
பத்ம ஸ்ரீ விருது, தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது போன்ற பல விருதுகள் இவரை தேடி வந்தன. தமது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் ராஜபார்வை, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், சதிலீலாவதி, ‘விருமாண்டி, உள்ளிட்ட படங்களையும் தயாரித்து இருந்தார். மேலும், இந்தியன், குருதிப்புனல், தேவர் மகன், நாயகன், சாகர் ஆகிய படங்கள் ‘ஆஸ்கார்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
தொடர்ச்சியான புதிய முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர் கமல்ஹாசன். ஆம், கலைப் படங்களில் துளியும் தயங்காமல் தயாரித்து, எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் தானே மீண்டும் எழுந்து வந்து விடை கொடுப்பார். அப்படி அமைந்த படம் தான் புதிய “விக்ரம்” படம். ஆம், யாரை பாக்ஸ் ஆபீஸ் வசூலை குவிக்க முடியாது என்று சொன்னர்களோ அவரை திரும்பி பார்த்தது இந்திய சினிமாவே. தற்போது, சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். அதே போல அரசியல் பாதையிலும் ஒரு கை பார்த்து வருகிறார்.
இன்னும் இவர் இப்படியே பல சாதனைகள் புரிய பல திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.