சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற சிற்பக்கூடத்தில் ரசாயன கலவை இல்லாத ஆர்கானிக் முறையிலான விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகிறது.விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக ஆங்காங்கே விநாயகர் சிலைகளை ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் , மோட்டூர் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்த சின்னசக்தி என்பவர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று முழுக்க முழுக்க கிழங்கு மாவு மற்றும் காகித கூழ்களால் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அரை அடி முதல் 12 அடி வரையில் 700-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரித்துள்ள இவர், இந்த ஆண்டு தஞ்சை நந்தி கணபதியுடன், கவுரி தாய் சிலையை வடிவமைத்துள்ளார். ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படுவதால் தண்ணீர் எளிதில் கரைந்து மீன்களுக்கு உணவாகவும் கிடைக்கும் என்றும், 20 க்கும் மேற்பட்டவர்களுடன், கைவினை சிற்பக் கூடமாக நடத்திவருவதால், முதன் முதலாக ஐஎஸ்ஓ உலக தரச் சான்றுடன் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.