போராட்டத்தின் இரண்டாம் கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் மேலும் பல போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற பிணை வழங்கப்பட்டதன் பின் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த கட்டமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
ஜனாதிபதிக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 83 ஆர்ப்பாட்டக்காரர்களில், 80 பேர் பொலிஸ் பிணையிலும், 3 பேர் நீதிமன்றத்தால் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.