அலைபேசி பயன்படுத்தும் அனைவருக்குமே இன்று இணைய சேவை முற்றிலும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டும். தற்போது, 4 ஜி பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு இன்னும் இணையத்தின் வேகம் தேவைப்படுவதால் அதை தர பல
தொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களை ஆயத்தம் ஆக்கி வருகின்றன.
இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ‘5ஜி’ என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த 5 ஜி வசதியை தொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள் தருவதன் மூலம் அதிவேக இணையதள வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தப்பட்டது. அதில், ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. ₹1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பில் ஏலம் போனது.
இந்தநிலையில், நாட்டில் டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது, சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.