காஞ்சிபுரம் அடுத்த மாகறல் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசு லட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் மதன்(12). ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுவன் மதன், கடந்த மூன்று ஆண்டுகளாக தன் கைகளால் களிமண்ணில் செய்த பல்வேறு பொம்மைகளை கொண்டு இந்தாண்டு நவராத்திரி விழாவை ஒட்டி தன் வீட்டில் கொலு வைத்துள்ளார்.
கடந்த 2020யில் கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் முடங்கி கிடந்த போது தன் தாத்தாவிடம் களிமண்ணால் பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்டு, தன் கைகளால் செய்த பொம்மைகளை வீணடிக்காமல் இந்தாண்டு நவராத்திரி விழாவில் கொலு வைக்க முடிவு செய்து அதன்படி மூன்று ஆண்டுகளாக தான் செய்து வைத்திருந்த களி மண்ணில் செய்த பொம்மைகளை வைத்து நவராத்திரி விழா கொண்டாட முடிவு செய்து அதன்படி ஒன்பது படிகள் அமைத்து பறவைகள், விலங்குகள்,ஊர்வன, மனிதர்கள், சப்தரிஷிகள், சரஸ்வதி,லட்சுமி,பார்வதி விநாயகர்,பிரம்மதேவர்,அம்மன், முருகர் என பல்வேறு கடவுள் சிலைகள் கொலுவில் வைத்துள்ளான்.இச்சிறுவயதில் களிமண்ணால் பொம்மைகள் செய்து கொலு வைத்து அசத்திய அச்சிறுவனை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.