Mnadu News

கசிந்த பெட்ரோலை சேகரித்த 11 பேர் பலி: லைட்டரை பற்ற வைத்த நபரால் விபரீதம்.

மிசோரமின் அய்சாவல் மாவட்டத்தில் துய்ரியால் பகுதியில் பெட்ரோல் ஏற்றி கொண்டு சென்ற லாரி ஒன்று கடந்த அக்டோபர் 29-ந்தேதி விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து ஆறாக ஓடியுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதியில் வசித்தவர்கள் வாளி உள்ளிட்டவற்றை தூக்கி கொண்டு பெட்ரோலை சேகரிக்க ஓடி சென்றுள்ளனர். இந்த நிலையில், லாரி திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். தவிர, வாடகை கார் ஒன்றும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன. இதுபற்றி மிசோரம் போலீசார் கூறும்போது, இந்த சம்பவத்தில் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் சென்ற லாரி விபத்தில் சிக்கி உள்ளது. அதிகம் நெருப்பு பற்ற கூடிய சூழலில், மக்கள் பெட்ரோல் சேகரிக்க சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் லாரியின் அருகே சாலையின் நடுவில் நின்றிருந்த நபர் ஒருவர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரை எரிய விட்டுள்ளார். அந்த நெருப்பு பரவி, லாரி வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி அந்த நபர் தனது தவறை ஒப்பு கொண்டுள்ளார். கவனம் இல்லாமல் நடந்து விட்டது என அவர் கூறியுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றுள்ளோம் என போலீசார் கூறியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர். விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து பெட்ரோல் சேகரிக்க சென்று, லைட்டரை பற்ற வைத்த நபரால் 11 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விவரம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends