நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இது குறிப்பிடப்படுவது வழக்கமாக உள்ளது. கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்திலும், குஜராத்திலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில் பாஜக உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஆரோக்கியமான, வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, அதன்பிறகு சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாஜக விரும்புவதாக அவர் கூறினார். அதோடு, அரசு மதச்சார்பற்றதாக இருக்கும்போது, சட்டங்கள் மட்டும் எவ்வாறு மதம் சார்ந்து இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரே பொது சிவில் சட்டம்தான் இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.
இந்நிலையில், பாஜக ஆளும் கர்நாடகாவிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வர அம்மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் கொண்டு வருவது அகில இந்திய அளவில் பாஜகவின் திட்டம் என தெரிவித்த அவர், இது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் குழு அமைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
பொது சிவில் சட்டம் அனைவரும் விரும்பக்கூடியது என தெரிவித்த பசவராஜ் பொம்மை, எனவே அதனை அமல்படுத்தத் தேவையான ஆலோசனைகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.