Mnadu News

ஆளுநரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது: அமைச்சர் ரகுபதி பதில்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றோடு கடைசி நாள் முடிந்தும் ஆளுநர் ஒப்புதல் கையெழுத்து போடாததால், அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி காலாவதியானது. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இயற்றப்பட்ட சட்டம் தொடர்பாக ஆளுநர் சில சந்தேகங்கள் கேட்டவுடன், 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. நேற்று மாலைக்குள் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 95 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் ஒருவித நோய் என்று அறிவித்துள்ளது. இந்த நோயை ஒழிக்க வேண்டியது நமது தலையாய பணி. இந்த பணியைத்தான் தமிழக அரசு செய்துள்ளது. தமிழக அரசு எல்லாவிதமான, முறையான பதில்களையும் ஆளுநரிடம் அளித்துள்ளது. இதில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஏன் ஆளுநர் காலதாமதப்படுத்துகிறார் என்பது தெரியவில்லை.
அதற்கான காரணம் அவருக்குத்தான் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கின்ற உரிமை எங்களுக்கு கிடையாது. ஆளுநர் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்கும் உரிமை தான் எங்களுக்கு உள்ளது. ஆன்லைன் ரம்மியால் இனி ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். தற்போது அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான், இனிமேல் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க முடியும். என்று அவர் கூறினார்.

Share this post with your friends