Mnadu News

சாவர்க்கரை பற்றி பேச ராகுலுக்கு தகுதியில்லை: ராஜ் தாக்கரே தாக்கு.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் ‛பாரத் ஜோடோ’ எனப்படும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரைக்கு இடையே சமீபத்தில் ராகுல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கீழ் படிந்து நடந்தார்;
அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சிறையிலிருந்து விடுதலையானார்’ என பேசினார். இது, மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளதாவது: சிறையில் அடைக்கப்பட்டு, இவ்வளவு வேதனைகளை அனுபவித்த சாவர்க்கரைப் பற்றி பேசுவதற்கு ராகுலுக்கு என்ன தகுதியுள்ளது?.
அன்று சாவர்க்கர் செய்தது, யுக்தி! மகாராஜர் சிவாஜி கூட, தனது கோட்டைகளை மிர்சா ராஜா ஜெய்சிங்கிடம் கொடுத்திருந்தார். அவையெல்லாம் பரிசுகள் அல்ல… யுக்தி. ஒவ்வொரு தேசிய தலைவர்களுக்கும் நேர்மறை, எதிர்மறை பக்கங்கள் உள்ளன.

அதனால் எந்த பலனும் இல்லை என்பதால் எதிர்மறையான பக்கங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
பா.ஜ., மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் சொல்கிறேன்.. நேரு, இந்திரா போன்ற நமது வரலாற்று தலைவர்களை அவப்பெயருக்கு உள்ளாக்குவது தேவையில்லாத செயல். நம் நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
சுதந்திரத்திற்காக போராடிய தேசத் தலைவர்களை விமர்சிப்பதால் எந்த பயனையும் அடைய மாட்டீர்கள். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends