Mnadu News

மத்திய அரசு விடுத்த அலர்ட்! நாடெங்கும் உள்ள கொரோனா மையங்களில் இன்று ஒத்திகை!

பிஎஃப்-7 வகை புதிய தொற்றும் வேகமாக பரவுவதாலும் சீனா, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், அதனை எதிர்கொள்ள நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, நாடெங்கும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தயார்நிலை குறித்து இன்று ஒத்திகை நடைபெறுகிறது.

இதில்,கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்தால், அதனை எதிர்கொள்ளும் வகையில், ஆக்சிஜன் இருப்பு, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், நாடெங்கும் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

அதே போன்று, இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தற்போதைய நிலையில் அச்சுறுத்தும் வகையில், கொரோனா பரவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், பாதிப்புகள் திடீரென கூடும் என்பதை கடந்த 2 ஆண்டுகளாக பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கம் போல பொது இடங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தத்தம் அரசுகள் அடுத்தடுத்து வெளியிடும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share this post with your friends