Mnadu News

திரைப்பட தயாரிப்பாளர் சங்க விவகாரம் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நியமனத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சேகர், தனக்கு உதவியாக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார்.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்காலிகக் குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு அதிகாரமில்லை எனவும், குழுவில் உள்ள ஏழு பேருக்கு எதிராக சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கதிரேசன் தரப்பில் வாதிடப்பட்டது.தனி அதிகாரியின் உதவிக்காக தான் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது எனவும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

Share this post with your friends