ஆன்லைன் மோசடி:
ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறை மற்றும் ஏ டி எம் கார்டு பயன்பாடு வந்த காலகட்டத்தில் இருந்து மோசடிகள் பல வடிவங்கள் எடுத்து வருகின்றன. அப்படி ஒரு பலே மோசடி தான் விழுப்புரத்தில் ஒரு முதியவருக்கு நடந்து உள்ளது.
முதியவருக்கு வந்த அழைப்பு:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கடம்பூரை சேர்ந்தவர் 78 வயதான கிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்று அரசு பள்ளி ஆசிரியர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருடைய செல்போனை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி, நீங்கள் பயன்படுத்தி வரும் ஏ.டி.எம். அட்டை முடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும், அதனை புதுப்பிப்பதற்கு உங்களுடைய ஏ.டி.எம். அட்டை எண் தரும்படி கேட்டார். இதை உண்மை என நம்பிய அவர், தன்னுடைய ஏ.டி.எம். அட்டையின் எண்ணையும் மற்றும் தனது செல்போனுக்கு வந்த OTP எண்ணையும் கொடுத்தார்.
பணத்தை உருவிய ஆசாமி:
பின்னர் அந்த நபர் பலே கில்லாடி வேலை ஒன்றை செய்துள்ளார். அன்றைய தினமே கிருஷ்ணனின் வைப்புத்தொகை கணக்கில் இருந்த 1 லட்சத்து 10 ஆயிரத்தில் 98 ஆயிரத்து 990 ரூபாயை கடன் எடுத்த தொகையாக இன்டர்நெட் பேங்கிங் மூலம் கிருஷ்ணனின் சேமிப்பு கணக்கிற்கு மாற்றினார். மேலும் அந்த கணக்கில் இருந்து ஒன்றரை லட்சத்தை அவ்வப்போது எடுத்து வந்துள்ளார். ஆனால் இந்த விவரம் தெரியாமல் கிருஷ்ணன் கடந்த 17 ஆம் தேதியன்று பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றபோதுதான், தன்னுடைய பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்து உள்ளார்.
வழக்கு பதிவு :
இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், எங்கு இருந்து யார் தொடர்பு கொண்டு வங்கி விவரங்கள் கேட்டாலும் தர வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.