பறக்கும் பாலம் :
மதுரையில் இருந்து நத்தம் செல்வதற்காக தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், இந்த பாலத்தில் வாலிபர்கள் அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு வருவதால் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பாலத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் பைக் சாகசங்கள்:
போலீசாரின் கண்காணிப்பை மீறி சில வாலிபர்கள் அந்த பாலத்தில் வேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்று சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர்.
பயங்கர விபத்து:
இந்த நிலையில் ஊமச்சிக்குளத்தில் இருந்து மதுரை தல்லாகுளம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 பேர் நேற்று இரவு அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியதில் அதில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்தனர். இதில் வாகனத்தை ஓட்டி வந்தவர் அதே இடத்தில் நெஞ்சில் அடிப்பட்டு கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்தவர் சுமார் 20 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர் என தெரிய வந்துள்ளது.
இருவர் மரணம்:
பின்னர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு இருந்த போலீசார் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வாகனத்தை ஓட்டி வந்தவர் பெத்தானியாபுரத்தை சேர்ந்த 23 ஸ்ரீனிவாசன் பாபு என்பதும், பின்னால் வந்தவர் வடக்குமாசிவீதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் 25 வயதான ஆனந்தகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. மேலும், அழகர் கோவில் அருகே ஒரு நண்பரின் இல்லத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த கோர விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.