கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளனர். கூகுள், ட்விட்டர், மெட்டா, பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, டெல் நிறுவனம் சுமார் 6,650 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. டெல் நிறுவனத்தின் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் விற்பனை குழுவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் விற்பனைக் குழுவில் உள்ள சிலர், நிறுவனத்தை விட்டு வெளியேறுவார்கள். நாங்கள் இந்த முடிவுகளை இலகுவாக எடுக்க மாட்டோம். மேலும், அவர்கள் அடுத்த வாய்ப்புக்கு மாறும்போது பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணிநீக்கங்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட சுமார் 6,650-க்கும் கூடுதலாக உள்ளதா? என்பதை டெல் நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.