தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. அதில் முதலாவதாக தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒடிசாவின் முன்னாள் கவர்னருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நாளை (14-ந் தேதி) எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. 15-ந் தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.