ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீநகரில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, தீவிரவாதத்தை ஒழித்து, அடல் பிகாரி வாஜ்பாயின் கனவை நிறைவேற்றுவோம், என்று பேசினார்.
ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நசீர் அகமது வானி உட்பட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டையும் நாட்டின் அமைதியையும் அவர்கள் காப்பாற்றியுள்ளனர். அவரைப்போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அனைத்து தீவிரவாதிகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து கட்டுவோம். அடல் பிகாரி வாஜ்பாயின் கனவை நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.
“காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாயத்து தேர்தலில் கலந்து கொண்ட மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டியும், நீங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஓட்டளித்தீர்கள். இன்று துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களுக்காக” என்று கூறினார்.