ஏழுமலையான் கோவில் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.ஆந்திர அறநிலைய துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அமைச்சர் ஸ்ரீ நிவாஸ் பேட்டி அளித்தார்.அப்போது,கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு தேர்தல் முடிவுகளுக்கு பின் பதவி விலகி இருக்க வேண்டும்.
ஆனால் அறங்காவலர் குழுவினர் பதவி விலக மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே அறங்காவலர் குழுவை ரத்து செய்து விரைவில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானின் திருவாபரணங்கள் மீது பக்தர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பக்தர்களுக்கு ஏழுமலையான் திருவாபரணங்கள் மீது இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியில் இருக்கும் பரம்பரை அர்ச்சகர்கள் தொடர்பான பிரச்சனைகள் ஆந்திரா முழுவதும் உள்ளன. பரம்பரை அர்ச்சகர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்.தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1300 கிலோ தங்கத்தை சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டுவந்ததில் குழறுபடிகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றச்சாட்டுகள் மீது விசாரனை நடத்தி அவற்றில் உண்மை இருப்பதாக தெரிய வந்தால் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது .