Mnadu News

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம் …

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு தரப்பினரின் கார் எரிக்கப்பட்டதற்கு பதிலடியாக அம்பேத்கர் சிலை உடைக்கப்படவே உருவான மோதலால் பதற்றம் நிலவியது.வேதாரண்யம் கடைத் தெரு பகுதியில் வசிக்கும் இரு சமூக இளைஞர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு, பகை வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. முன்விரோதத்தைக் காரணம் காட்டி, நேற்று மாலை ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞனை, மற்றொரு தரப்பினர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அடிபட்ட இளைஞன் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர்கள், தாக்கிய நபர்களைத் தேடியுள்ளனர். அப்போது தாக்குதல் நடத்திய தரப்பைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் நபர், தனது பொலிரோ காரை காவல் நிலையம் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட எதிர் தரப்பினர், காரை ஆக்ரோஷத்துடன் அடித்து நொறுக்கியதுடன், தீவைத்தனர். சில நிமிடங்களில் அந்த கார் பயங்கரமாக எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக வாகனம் முற்றிலும் எரிந்து போனது.

கார் எரிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உரிமையாளரும், அவர் தரப்பைச் சேர்ந்தவர்களும், கடைத் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலையை அடித்து நொறுக்கியதால் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இரு தரப்பினரும் கட்டைகள், கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

பதற்றம் அதிகரித்ததை அடுத்து அங்கு பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, அப்பகுதி வெறிச்சோடியது. இதை அடுத்து திருச்சி சரக ஐஜி வரதராஜூலு, நாகை எஸ்.பி. ராஜசேகரன், திருவாரூர் எஸ்.பி. துரை ஆகியோரது தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக புதிய சிலை வைக்கப்படவே பதற்றம் ஓரளவு தணிந்தது. இரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கடைகள் ஓரளவு திறக்கப்பட்டதுடன் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியதால் நிலைமை ஓரளவுக்கு சீராகியுள்ளது.இதனிடையே, அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், பேருந்துகள் மீது கற்கள் வீசப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

Share this post with your friends