அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, கடலூா், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 400க்கும் மேற்பட்ட காளைகள் கிராமத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிவரும் காளைகளை அடக்க 150 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சீறிவந்த காளைகளை அடக்க முயன்றபோது 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள். கட்டில். பண பரிசுகள். தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக போட்டியில் கலந்துக் கொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதித்தனர். இதே போல மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.