இ-சிகரெட் விற்றால் ஓரு வருடம் சிறை தண்டனை விதிக்கும் வரைவு அவசர சட்டம் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகையிலை சிகரெட்டுகளுக்கு மாற்றாக சில நாடுகளில் இ-சிகரெட் என்று கூறப்படும் மின்னணு சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.இதுவும் உடல்நலத்திற்கு கேடு என்பதால் இதனை தடை செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு வரைவு அவசர சட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி இ-சிகரெட் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், வினியோகம் மற்றும் விற்க செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
இதனை முதன்முறையாக மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு வருட சிறைதண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மீண்டும் தடையை மீறினால் 3வருட சிறை தண்டனை 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த வரைவு சட்டம் பிரதமர் அலுவலகம் உத்தரவின் பேரில் மத்திய அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அவர்கள் இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து பரிசீலித்து வருகிறார்கள். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால் அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.