விம்பிள்டனில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெடரர், 11 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதியில் நடாலை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் விடாப்பிடியாக விளையாடிய பெடரர் 7-6 என்ற செட் கணக்கில் முதல் செட்டை தன்வசப்படுத்தினார். இரண்டாவது செட் விளையாடும்போது நடாலின் கை ஓங்கியதால், மைதானத்தில் இருந்த பெடரர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பெடரர், அடுத்த இரு செட்களிலும் சாதுர்யமாக விளையாடி, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதன் மூலம், விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு 12வது முறையாக பெடரர் முன்னேறினார்.
முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டியில், ராபர்டோ படிஸ்டாவை வீழ்த்தி, நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நடப்புச் சாம்பியனான ஜோகோவிச், அரையிறுதி ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் பேட்டிஸ்டா ஆகட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை 6க்கு2 என எளிதாக கைப்பற்றிய ஜோகோவிச், 2-வது செட்டை 4க்கு6 என இழந்தார். இதைத்தொடர்ந்து தனது அனுபவத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் அடுத்த இரு செட்களையும் 6க்கு3, 6க்கு 2 என கைப்பற்றி, இறுதி போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சும், பெடரரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்