நாடு முழுவதும் வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போலீசார் கூறி உள்ளனர்.களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளே வைக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் 12 நபர்கள் இருக்க வேண்டும். போலீசார் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் சிலையை வைக்க வேண்டும்.
சிலை வைக்கப்படும் இடத்தில் சந்தேகமான முறையில் சைக்கிள்கள், இதர வாகனங்கள், பொருட்கள் இருந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். சிலையை எக்காரணம் கொண்டு கேட்பாரற்று விட்டு செல்லக்கூடாது. சிலை எடுத்து செல்லும்போது போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது. சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
சிலை உயரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது இதர மதத்தினரை புண்படும்படி பேசக்கூடாது. சிலை எடுத்து செல்லும்போது வாணவெடி மற்றும் பட்டாசு வெடிக்க கூடாது. சிலை செல்லும் வழியில் திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்க கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. ஊர்வலத்தின்போது காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.