கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் மூன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களும் ஆளுநரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்தனர். இதையடுத்து 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விமானம் மூலம் மும்பை சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து அழைத்து வர காங்கிரஸ் அமைச்சரான டி.கே.சிவக்குமார் நேற்று மும்பை சென்றார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சிவக்குமார் ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் தெரிவித்து பத்து எம்.எல்.ஏக்களும் மும்பை காவல்துறை ஆணையருக்கு கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினர். இதனையடுத்து ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஓட்டலுக்கு செல்ல முயன்ற டி.கே.சிவக்குமார் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்து செல்ல மறுத்த சிவக்குமார், விடுதிக்குள் செல்வதில் உறுதியாக இருந்தார்.
மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிவக்குமார் உடன் இருந்தனர் சுமார் 6 மணி நேரம் வரை விடுதி முன் தர்ணா செய்து வந்த சிவக்குமாரையும் உடன் இருந்த தலைவர்களையும் கைது செய்த போலீசார், அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர்.
இந்நிலையில் மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டதாலும், 2 சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாலும், பெரும்பான்மை பலத்தை குமாரசாமி தலைமையிலான அரசு இழந்து விட்டதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் குமாரசாமி தமது ராஜினாமா முடிவை அறிவிக்க இருப்பதாகவும், அரசைக் கலைக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று பரிந்துரை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.