OCD என்பது ஒரு மனநல கோளாறு. இதயநோய் போல இதுவும் ஒரு நோய்தான். இதற்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும் சில அறிகுறிகளை அகற்ற உதவும்.
நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, வீட்டை சுத்தமாக பராமரிப்பது போன்றவை ஆரோக்கியமான பழக்கவழக்கம். ஆனால் இந்த பழக்கம் அளவுக்கு மீறி அதிகமாகும் போது மனநோயாக மாறுகிறது. கைகளை பலமுறை கழுவுவது, வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, ஆடைகள் எப்போதும் அடுக்கி வைத்துக் கொண்டே இருப்பது போன்றவை ஒருவித மனநோய் கோளாறின் அறிகுறியாகும். இதனை அப்சசிவ் கம்பல்சிவ் டிஸார்டர் (OCD – Obsessive Compulsive Disorder) என்னும் மன சுழற்சி நோய் அல்லது எண்ண சுழற்சி நோய் என்று குறிப்பிடுவார்கள்.
OCD என்றால்என்ன?
அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு என்பது ஒரு நபருக்கு அடிக்கடி தோன்றும் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது யோசனைகள் எடுத்துக்காட்டாக சுத்தம் செய்தல், பொருட்களைச் சரிபார்த்தல், கைகளைக் கழுவுதல் போன்ற தொடர்ச்சியான நடத்தைகள் அளவுக்கு அதிகமாக ஒரு நபரின் வாழ்க்கையை பதிக்குமானால் அதுவே OCD ஆகும். OCD என்பது நகங்களைக் கடிப்பது அல்லது எதிர்மறையான எண்ணங்களை நினைப்பது போன்ற கெட்ட பழக்கம் அல்ல. ஒரு அழுக்கு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொட்ட பிறகு பத்து முறை கைகளைக் கழுவுவினால் தன சுத்தமாகும் என்று நினைக்கும் ஒரு எண்ணமாகும்.
OCD யின் அறிகுறிகள் என்ன?
எதையும் பலமுறை பரிசோதித்து பார்ப்பது :
கதவு பூட்டி இருக்கிறதா? கேஸ் சிலிண்டர் சரியாக மூடி இருக்கிறதா? என்று ஒவ்வொரு செயலையும் 3-4 மணிநேரத்திற்கு ஒரு முறை சரி பார்ப்பது என்பது OCDயால் பாதிக்கப்பட்டவர்களின் பழக்கமாகும். இது மறதிப் பிரச்னை இல்லை. ஆனால் மூளையின் ஓரத்தில் தாழ்ப்பாள், கைகழுவுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கும். 2 அல்லது 3 முறை கைகழுவினால் தான் சுத்தமாகும் என்று நினைத்து கொள்வது போன்றவையும் இதில் அடங்கும்.
அதிக ஒழுங்குபடுத்தும் தன்மை :
OCDயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக ஒழுங்குபடுத்தும் தன்மையுடன் இருப்பார்கள். எல்லா செயல்களையும் ஒரு குறிப்பிட்ட பாங்கில் செய்வார்கள். மேஜையின் இடது பக்கத்தில் மட்டுமே போனை வைத்திருப்பது, தண்ணீர் பாட்டிலை வலது பக்கத்தில் மட்டுமே வைத்திருப்பது என்று எந்த ஒரு செயலையும் மாற்றி செய்யவே மாட்டார்கள். அவர்களை சுற்றி வைத்திருக்கும் பொருட்களை இடம் மாற்றி இருப்பதாய் விரும்பமாட்டார்கள். ஒருவேளை அந்த பொருட்கள் மாற்றி வைக்கப்பட்டால் அது குறித்து பதட்டம் அல்லது கோவப்படுவார்கள்.
கூட்டமான இடத்தை தவிர்த்தல் :
மக்கள் கூடும் பகுதிகளில் இருப்பதை விரும்ப மாட்டார்கள். கூட்டமாக இருக்கும் இடத்தை தவிர்க்கவே எண்ணுவார்கள். கை குலுக்குவதைக் கூட தவிர்க்க எண்ணுவர்.
துக்கம் தடைபடும் :
பொதுவாக ஓசிடி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்க்கையில் மறக்க நினைக்கும் ஒரு கசப்பான நிகழ்வைகளை மூளை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும். இதனால் தூக்கம் தடைபடும். மேலும் மற்ற வேலைகளிலும் ஈடுபாடு குறையும்.
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையைப் பெறுவது OCD மோசமடைந்து அல்லது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்காமல் இருக்க உதவும்.
OCD ஏற்படுவதன் காரணம் என்ன?
OCDக்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், பின்வரும் காரணங்கள் இருக்கலாம் என வல்லுனர்களால் கூறப்படுகிறது. OCD ஒரு மரபணு கூறுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் OCDயை ஏற்படுத்தும் குறிப்பிட்ட மரபணுக்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது உடலின் இயற்கையான வேதியியல் மாற்றம் OCD யை உருவாக்கலாம்.மன அழுத்தம் அல்லது அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள் OCD அதிகரிக்கும் அபாயத்தை உண்டாகிறது. இது மன உளைச்சலை தூண்டலாம். குடும்பத்தில் யாருக்காவது OCD இருந்தால் நமக்கும் அதே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
OCDக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?
OCDக்கு செய்யக்கூடிய சிகிச்சை OCD-ஐ குணப்படுத்தாது, ஆனால் அறிகுறிகளைக் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். இது OCD இன் அறிகுறிகள் மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்து, சிலருக்கு நீண்ட கால மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை விவரிப்பதன் மூலம் OCD உளவியல் மதிப்பீட்டை செய்யலாம். மருத்துவர் உங்களை நிர்பந்தங்களைத் தூண்டும் அல்லது பதட்டத்தை உருவாக்கும் சூழ்நிலைகளில் வைப்பார். அதற்கு நம் எப்படி வெளிப்படுகிறோம் அல்லது நாம் அளிக்கும் பதில்களை கொண்டு OCD எண்ணங்கள் அல்லது செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை கண்டறிவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் போன்ற மருந்துகள் தொல்லைகள் மற்றும் நிர்பந்தங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மருந்துகளில் ஃப்ளூக்ஸெடின், சிட்டோபிராம், பராக்ஸெடின், எஸ்கிடலோபிராம், ஃப்ளூவோக்சமைன் மற்றும் செர்ட்ராலைன் ஆகியவை அடங்கும். அவைகள் வேலை செய்ய இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். இந்த மருந்துகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவவில்லை என்றால், மருத்துவர் ரிஸ்பெரிடோன் மற்றும் அரிப்பிபிரசோல் போன்ற ஆன்டிசைகோடிக் மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
தொடர்ந்து உளவியல் மருத்துவரிடம் சைக்கோ தெரப்பி எனப்படும் உளவியல் ஆலோசனைக்குச் செல்வதும், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர் பரிந்துரைக்கும் காலம் வரை எடுத்துக்கொள்வதுமே, ஓசிடி பிரச்னைக்கு சிபிடி எனப்படும் Cognitive Behaviour Therapy அளிக்கப்படும். இது தொடர் நீண்ட நாள்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கலாம். எனினும் முழு ஈடுபாட்டுடன் நிபுணர் கூறும் உளவியல் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.
OCD-ஐ குணப்படுத்தலாமா?
OCD தானாக சரியாக வாய்ப்புகள் குறைவு. இது ஒரு நாள்பட்ட கோளாறு. இதற்கு சிகிச்சை மிகவும் அவசியமானது. OCD ஐ தடுக்க உறுதியான வழியும் இல்லை என்றாலும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்ளுவதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். இது தினசரி வழக்கத்தை சிறிது சரி செய்ய உதவும் என்று நம்பப்படுகிறது.