நாளை நடைபெறவிருக்கும் தபால்துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் நாளை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த தேர்வு தமிழ் உட்பட 15 மொழிகளிலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில்,தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஏற்கனவே தபால்துறை தேர்வின் தமிழ்மொழி தாளில் வடமாநில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டைப்போலவே மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.