அத்திவரதரை வழிபடுவதற்காக நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளார். இதை முன்னிட்டு கோவிலைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படை வீரர்கள் 100 பேரும் தங்களது நிலைகளில் தயார் நிலையில் உள்ளனர். இன்று மாலை தொடங்கி கோவில் அருகே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் கூறியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் வழிபட உள்ளதால், நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி 5 மணி வரை பொது தரிசனத்திற்கும், காலை 10 மணியுடன் சிறப்பு தரிசனத்திற்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஆனி கருட சேவையை முன்னிட்டு மாலை 5 மணிவரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வரை 11 லட்சத்து 20 ஆயிரம் பேர் அத்திவரதரை வழிபட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒருநாளில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் அத்திவரதரை வழிபட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது .