பானி புயல் சென்ற வாரம் ஒடிசாவையே புரட்டிப்போட்டது . புயல் கரையை கடந்தாலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் வசதியின்றியும், மின்சார வசதி இணைப்பு துண்டித்தும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர் . பானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று பானி புயலால் கடுமையாக சேதம் அடைந்த பூரி மாவட்டம் மற்றும் பிற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம், ஆய்வு செய்தார். மோடியுடன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் , மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக, விமானம் மூலம் ஒடிசா வந்த பிரதமர் மோடியை அம்மாநில கவர்னர் கனேஷி லால் மற்றும் முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர்.