Mnadu News

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்டம்

ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில்.

இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.

இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் விழாவை அடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி ஏப்ரல் 5ஆம் தேதி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து சித்திரை தேர் திருவிழா ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்னத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது. விழாவின் போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

Share this post with your friends