திருப்பூர் – நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம், பனியன் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை வர்ஷினி. இந்நிலையில் இன்று மாலை வீட்டினுள் விளையாடி கொண்டிருந்த குழந்தை வர்ஷினி வீட்டின் இரும்பு கதவை திடீரென தாளிட்டு கொண்டது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு வெளியிலிருந்த தாய் மீனாட்சி கதவை திறக்க முயன்ற போது கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்புத்துறை ஊழியர்கள் டோர் ஓப்பனர் என்னும் புதிய கருவி மூலம் பத்து நிமிடங்களுக்குள்ளாக கதவை திறந்தனர்.
எவ்வித ஆபத்துமின்றி குழந்தை வர்ஷினி காப்பற்றப்பட்டாள். இதுகுறித்து நிலைய அதிகாரி பாஸ்கர் கூறும்பொழுது குழந்தைகளை தன்னிச்சையாக வீட்டினுள் விளையாட விட்டு பெற்றோர் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று தெரிவித்தார்.