அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும்-அவரது முதல் மனைவி இவானா டிரம்புக்கும் 3-வது குழந்தையாகப் பிறந்த எரிக், 2014-ம் ஆண்டு லாரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு வயதில் எரிக் லியூக் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், லாரா 2-வது முறையாக கருவுற்றிருந்தபோதும், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தனது மாமனாரும், அமெரிக்க அதிபருமான டிரம்புக்கான பிரச்சார வேலைகளில் ஒரு ஆலோசகராக தீவிரம் காட்டி வந்தார். பிரச்சார வீடியோக்கள் தயாரிப்பு, சமூக வலைதளங்களில் பதிவேற்றல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட லாரா, கடந்த மாதம் டிரம்புக்காக மகளிர் என்ற நிகழ்ச்சியில் நடனமாடி விருந்தினர்களை வரவேற்றார்.
இந்நிலையில் நேற்று மாலை எரிக்-லாரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கரோலினா டோரதி டிரம்ப் என பெயரிட்டுள்ளதாக தம்பதியினர் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேரக்குழந்தைகள் பட்டியலில் கரோலினா 10-வதாக இணைந்துள்ளார்.