மணப்பாறையில் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் பணிகளின் போது ஆசிரியர்கள் தான் வாக்குச்சாவடியில் பணியாற்றுவார்கள்.
இப்படி பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிடும் வகையில் தபால் வாக்கு மற்றும் இடிசி மூலம் வாக்களித்திடும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும்.
இதே போல் 17 வது பாராளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகின்றது. இதற்காக திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆசிரியர்கள் பலரும் கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு பணிக்கு செல்கின்றனர்.
இதையடுத்து கரூர் மக்களவை தொகுதியில் உள்ள மணப்பாறை சட்டமன்ற தொகுதி ஆசிரியர்கள் பலரும் தாங்கள் பணியாற்றும் இடத்திலேயே வாக்களிக்க ஏதுவாக இடிசி (ELECTION DUTY CERTIFICATE) க்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடிசி வழங்கப்படாமல் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இடிசி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் இன்று தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சென்று முறையிட்டனர். ஒரே தொகுதியில் பணியாற்றும் எங்களுக்கு ஏன் தபால் ஓட்டு வழங்கிட வேண்டும். நாங்கள் இடிசி தான் விண்ணப்பித்திருந்தோம். ஆகவே நாங்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தபால் வாக்கு என்றால் அதற்கு தாசில்தாரிடம் கையொப்பம் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் இருப்பதால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே எங்களுக்கு உடனடியாக இடிசி வழங்கிட வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் அதிகாரிகளிடம் வந்து ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தினர்.
இருப்பினும் ஆசிரியர்கள் தங்களின் வாக்கை பதிவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .ஆசிரியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை இதுபோன்ற எங்களுக்கு குழப்பம் ஏற்படுத்தியது இல்லை. ஆகவே இந்த முறை தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி எங்களின் வாக்கை தடுக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.